தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் 22 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை


தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் 22 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் 22 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பிள்ளையார்பட்டி,

தஞ்சை நகரில் ஓடும் பெரும்பாலான வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள்(ஏர் ஹாரன்கள்) பொருத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த வாகனங்களில் இருந்து எழுப்பும் ஒலியானது வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாகவும் எனவே இந்த காற்று ஒலிப்பான்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் தஞ்சை மாவட்ட நுகர்வோர் அமைப்புகளின் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதனைத்தொடர்ந்து சென்னை போக்குவரத்து ஆணையர் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் அறிவுரையின்படியும் தஞ்சை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கார்த்திகேயன்(தஞ்சை), அருணாச்சலம்(கும்பகோணம்), திருச்சி மாசு கட்டுப்பாட்டு வாரிய துணை தலைமை விஞ்ஞான அலுவலர் ராமநாதன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், தஞ்சை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழிய பாண்டியன், வெங்கிடுசாமி, விஸ்வநாதன் மற்றும் குண்டுமணி ஆகியோர் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான், ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்ட 87 வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது 22 வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. மேலும் 12 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, தனியார் மற்றும் அரசு பஸ்களில் மத்திய மோட்டார் வாகன விதி எண் 119(2)க்கு புறம்பாக உள்ள அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கண் கூசும் வகையில் முகப்பு கண்ணாடியில் பொருத்தப்பட்டு இருந்த டிஸ்கோ விளக்குகள் அகற்றப்பட்டன.

மேலும் இவ்வாறான புகார்கள் தொடர்ந்து வரப்பெற்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த அதிரடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Next Story