கடையநல்லூர் அருகே மரத்தில் லோடு ஆட்டோ மோதி புது மாப்பிள்ளை பரிதாப சாவு - நண்பர் படுகாயம்


கடையநல்லூர் அருகே மரத்தில் லோடு ஆட்டோ மோதி புது மாப்பிள்ளை பரிதாப சாவு - நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே லோடு ஆட்டோ மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

புளியங்குடி,

கேரள மாநிலம் குதிரைகெடா பகுதியை சேர்ந்தவர் சித்திக் (வயது 24). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த முகமது கலீல் (28). 2 பேரும் ஒரு லோடு ஆட்டோவில், தினமும் மதுரைக்கு சென்று மொத்தமாக பழங்களை வாங்கி வந்து, திருவனந்தபுரத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்தனர்.

இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு 2 பேரும் ஒரு லோடு ஆட்டோவில் மதுரைக்கு சென்றனர். அங்கு பழங்களை வாங்கி கொண்டு அதே லோடு ஆட்டோவில் திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். லோடு ஆட்டோவை முகமது கலீல் ஓட்டினார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் நின்ற புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லோடு ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் சித்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முகமது கலீல் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முகமது கலீலை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் சித்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லோடு ஆட்டோவில் ஒரு பையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பத்திரமாக எடுத்து 2 பேரின் உறவினர்களிடமும் ஒப்படைத்தனர். சித்திக்கிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story