பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
தமிழக-கேரள எல்லையில் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையில் போலீசார் பரமசிவம், ஆறுமுகம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்த போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த சமீர் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் கொடுத்து 2 கிலோ கஞ்சா வாங்கி உள்ளனர். கேரளாவில் விற்பனை செய்வதற்கு பொள்ளாச்சி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து 2 பேரும் சிக்கினர்.
கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கஞ்சா கடத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story