கடலூரில், 60 டன் மத்தி, கவளை மீன்கள் சிக்கின - மீனவர்கள் மகிழ்ச்சி
கடலூரில் 60 டன் மத்தி, கவளை வகை மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. அந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகு மற்றும் வலைகளை சரிசெய்தனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்ததும் உற்சாகமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் மீனவர்கள் நினைத்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. நேற்று முன்தினமும் குறைந்த அளவிலேயே மீன்கள் சிக்கின. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
இருப்பினும் நேற்று அதிகாலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் மத்தி மற்றும் கவளை வகை மீன்கள் சிக்கின. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரைக்கு திரும்பினர். கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்ட கடலூர் துறைமுகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அங்கு முகாமிட்டிருந்த கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.
இதேபோல் கடலூர் மீனவர்கள் பலர், மீன்களை உடனடியாக விற்பனை செய்வதற்காக பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி தளத்திற்கு கொண்டு சென்றனர். இதை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கிச்சென்றனர். வியாபாரிகள் வாங்கிய மீன்களை லாரிகளில் ஏற்றி வெளியூர் களுக்கும், வெளிமாநிலத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு ஒரே நாளில் 60 டன் அளவிற்கு மத்தி மற்றும் கவளை மீன்கள் கிடைத்துள்ளன. அதிகளவு மீன்கள் கிடைத்ததால் கடலூர் மீனவர்கள் கடலூர் துறைமுகத்துக்கும், அன்னங்கோவில் மீன்பிடி தளத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்தார்கள்.
30 கிலோ கொண்ட ஒரு பெட்டி மத்தி மற்றும் கவளை மீன் வகைகள் ரூ.900 முதல் ரூ.1200 வரையில் விலைபோனது. இதேபோல் வரும் காலத்தில் இதை விட கூடுதலாக மீன்கிடைக்கும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 டன் வரையில் மீன் கிடைக்கும் என்றார்.
Related Tags :
Next Story