விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பதை கைவிடக்கோரி விரைவில் மனித சங்கிலி போராட்டம்
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பதை கைவிடக்கோரி விவசாயிகளை ஒன்று திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாளிபாளையத்தில் நேற்று முன்தினம் பவர் கிரிட் நிறுவனத்தினர் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய வந்துள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அளவீடு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. அங்கு வந்த அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் உயர்மின்கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று ஒன்று திரண்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு வந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விவசாயிகளை சந்தித்து பேசினார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பத்மநாபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சிவசெந்தில்குமார், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைத்து விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் புதைவட கேபிள் வழியாக மின்சாரத்தை சாலைகளின் ஓரத்தில் கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் ஏதும் நடத்தாமல், அத்துமீறி விவசாயிகளின் அனுமதி இன்றி நிலஅளவீடு செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி விரைவில் மின்பாதை செல்லும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். உயர்மின்கோபுரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக போலீசாரை வைத்து விவசாயிகளை மிரட்டக்கூடாது. விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story