நாய் குறுக்கே ஓடியதால், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டீக்கடைக்காரர் சாவு - மகளுக்கு தீவிர சிகிச்சை


நாய் குறுக்கே ஓடியதால், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டீக்கடைக்காரர் சாவு - மகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 4 July 2019 3:30 AM IST (Updated: 4 July 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டீக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மொடக்குறிச்சி, 

கணபதிபாளையம் நால்ரோடு அருகே உள்ள பழனிக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 55). இவர் சோளங்காபாளையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ஜம்புலிங்கமும், அவருடைய மகள் இந்துமதியும் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள பொன்காளியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பழனிக்கவுண்டன்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜம்புலிங்கம் ஓட்டினார். பின்னால் இந்துமதி இருந்தார். பாசூர் ரோட்டில் குரங்கன்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியது.

இதனால் நிலைதடுமாறி, மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜம்புலிங்கத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்துமதியும் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜம்புலிங்கம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜம்புலிங்கம் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்துவிட்டார். இந்துமதிக்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story