அரசமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை - கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
அரசமங்கலம் தென்பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. ஆனால் தற்போது விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் தென்பெண்ணையாற்றில் சட்டத்திற்கு புறம்பாக பல மாதங்களாக இரவு, பகல் பாராமல் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை சுரண்டி லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக மணல் கொள்ளையடிப்பவர்களை பொதுமக்கள், விவசாயிகள் தட்டிக்கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதன் காரணமாக நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இவர்கள் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மணலை சுரண்டி வருவதால் அரசமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகி வருவதால் லட்சக்கணக்கில் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.
இதுபற்றி தென்னக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சிவா, செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்த னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் உள்ள மணல் குவாரியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள அனுமதியையும் மீறி அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மணலை எடுக்கின்றனர். இதேபோல் அரசமங்கலம் தென்பெண்ணையாற்றிலும் மணல் கொள்ளையடிக்கப்படுவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும், விவசாயமும் பாதிக்கப்பட்டு இயற்கை வளம் மாசுபடுத்தப்படுகிறது. எனவே நமது மாவட்ட எல்லையான அரசமங்கலம் பகுதியில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story