மாவட்டத்தில், 73 நீர்நிலைகளில் ரூ.26½ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் தகவல்


மாவட்டத்தில், 73 நீர்நிலைகளில் ரூ.26½ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 73 நீர்நிலைகளில் ரூ.26½ கோடியில் குடி மராமத்து பணிகள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பாசனதாரர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுப்பணித்துறை ஏரிகளில் குடிமராமத்து திட்டப்பணியானது அந்தந்த ஏரிகளின் பாசனதாரர்களை கொண்டு சங்கம் அமைத்து திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் பாசனதாரர்களின் பங்களிப்போடு பாசனதாரர்களாலேயே செயல்படுத்தப்படும் ஒரு உன்னதமான திட்டமாகும்.

இந்த திட்டத்தில் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஏரியின் எல்லைகளை கண்டறிந்து எல்லை கற்களை பதித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மதகுகளை கட்டுதல், கலிங்கல் சீரமைத்தல், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், அணைக்கட்டுகளை பழுதுபார்த்தல், ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், ஏரியின் கரைகளிலும், நீர்பிடிப்பு பகுதிகளிலும் முளைத்துள்ள சீமை முட்செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 73 நீர்நிலைகளில் ரூ.26 கோடியே 42 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் கீழ்பெண்ணையாறு வடிநில கோட்டம் விழுப்புரம் மூலமாக 50 நீர்நிலைகளில் ரூ.13 கோடியே 65 லட்சத்திலும், வெள்ளாறு வடிநில உபகோட்டம் கள்ளக்குறிச்சி சார்பில் 23 நீர்நிலைகளில் ரூ.12 கோடியே 77 லட்சத்திலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 6,974.95 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி மேம்படுத்தப்படும்.

மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் விவசாயிகள், பாசனதாரர்கள் பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டால் நீர்வரத்து மிகவும் மேம்பாடு அடையும். விவசாயம் அதிகம் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் விவசாயிகள், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்களை அணுகி உங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் குறைகள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர்கள் ஜவஹர், மணிமோகன், உதவி செயற் பொறியாளர்கள் சுமதி, முருகவேல், கார்த்திகேயன், அன்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story