மரக்காணம் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய விவசாயியிடம் ரூ.1½ லட்சம் திருட்டு


மரக்காணம் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய விவசாயியிடம் ரூ.1½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய விவசாயியிடம் ரூ.1½ லட்சம் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர்(வயது55). விவசாயி. நேற்று மதியம் இவர் தனது இருசக்கர வாகனத்தில் மரக்காணம் வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்தார்.

பின்னர் அதை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார். அங்கு சில வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பூமீஸ்வரர் கோவில் அருகே வந்த போது வண்டியை நிறுத்தி விட்டு பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது பெட்டியில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மீண்டும் வங்கிக்கு வந்த அவர் அங்குள்ள அதிகாரிகளிடம் கூறி கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டார். ஆனால் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் குணசேகரனை நோட்டமிட்டு அவரது பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்.

Next Story