அம்பாத்துரை ஊராட்சியில், போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கிராம சபை கூட்டம்
அம்பாத்துரை ஊராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 20 ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
சின்னாளபட்டி,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 28-ந் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. ஆத்தூர் ஒன்றியம் அம்பாத்துரை ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, பொதுமக்கள் ஊராட்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையை தரவேண்டும் என்று கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
இதனைத்தொடர்ந்து அம்பாத்துரையில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த, ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று கிராம சபை கூட்டம் அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் நடந்தது.
ஊராட்சி செயலர் செந்தில்குமார் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஸ்டீபன் ராஜ் பார்வையாளராக கலந்து கொண்டார். கடந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்ததால், நேற்றைய கூட்டத்தில் சின்னாளபட்டி போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த கூட்டத்தில் ஊராட்சியில் செய்த பணிகள் குறித்த அறிக்கை கேட்டு பிரச்சினை எழுந்ததால் இந்த முறை இதுவரை செய்த அனைத்து பணிகள் குறித்த அறிக்கை கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் அம்பாத்துரையில் இணைப்பு சாலை போட வேண்டும், ஊராட்சி பகுதியில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், 20 ஆண்டுகளாக போடப்படாத சாலைகளை உடனடியாக போட வேண்டும், ஊராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகளின் சர்வே எண், பரப்பளவு, நீரின் கொள்ளளவு குறித்து தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சிலர் கடந்த 20 ஆண்டுகளாக அம்பாத்துரை ஊராட்சியில் எந்த பணியும் செய்யவில்லை என்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரி சுமார் 1 மணி நேரம் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியில் முறையான சம் பளம் வழங்கவில்லை என்றுபெண்கள் புகார் அளித்து கூச்சல் போட்டனர். அப்போது அதிகாரிகள் ஊராட்சிகளில் நடந்த பணிகள் குறித்து அறிக்கை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றனர். இருப்பினும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனிடையே கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story