எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்ற பாம்பை கொன்று உயிரை விட்ட நாய்


எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்ற பாம்பை கொன்று உயிரை விட்ட நாய்
x
தினத்தந்தி 5 July 2019 3:00 AM IST (Updated: 4 July 2019 7:29 PM IST)
t-max-icont-min-icon

எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக, பாம்பை கடித்து குதறி கொன்ற நாய் உயிரை விட்ட சம்பவம் நாசரேத்தில் நடந்துள்ளது.

நாசரேத்,

எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக, பாம்பை கடித்து குதறி கொன்ற நாய் உயிரை விட்ட சம்பவம் நாசரேத்தில் நடந்துள்ளது.

கல்லூரி பேராசிரியை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜூபிலி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பொன்செல்வி. இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வருகின்றனர்.

பொன்செல்வி தனது வீட்டில் ‘டேசன்’ இனத்தைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். அவற்றில் ஆண் நாய்க்கு ‘அப்பு’ என்றும், பெண் நாய்க்கு ‘நிம்மி’ என்றும் பெயரிட்டு அழைத்து வந்தார். பொன்செல்வியின் குடும்பத்தினர் 2 நாய்களையும் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

பாம்பை கடித்து குதறி...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பொன்செல்வி தன்னுடைய மகள்களுடன் வீட்டில் தூங்கினார். வீட்டின் வளாகத்தில் 2 நாய்களும் படுத்து கிடந்தன. அப்போது அங்கு சுமார் 5 அடி நீள நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது. அதனைப் பார்த்த 2 நாய்களும் குரைத்தன.

அப்போது ஆண் நாய், அந்த பாம்பின் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் அந்த பாம்பு, ஆண் நாயை கொத்தியது. இதில் நாயின் உடலில் வி‌ஷம் பரவியது. எனினும் அந்த நாய், பாம்பை தொடர்ந்து கடித்து குதறியது. மேலும் பாம்பை வீட்டின் படிக்கட்டு வழியாக மாடிக்கு இழுத்து சென்றது. அங்கு சிறிதுநேரத்தில் அந்த பாம்பும், நாயும் இறந்தன.

நேற்று காலையில் கண்விழித்த பொன்செல்வி வீட்டின் கதவை திறந்தபோது, வாசலில் பெண் நாய் மட்டும் நின்றது. உடனே பொன்செல்வி ஆண் நாயை தேடிச் சென்றார். அப்போது வீட்டின் மாடியில் நல்ல பாம்பும், ஆண் நாயும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தனது எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக பாம்பை கடித்து கொன்று உயிரை விட்ட நாயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். பின்னர் அந்த நாயையும், பாம்பையும் அப்பகுதியில் புதைத்தனர்.


Next Story