மாவட்டத்தில் இந்தாண்டு குடிமராமத்து பணிகளுக்கு ரூ.5½ கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு 20 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.5½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் (2019-2020) கீழ் மேற்கொள்ளப்பட உள்ள குடிமராமத்து பணிகள் குறித்து அந்தந்த பகுதிகளை சார்ந்த பாசனதாரர் விவசாய சங்கங்கள் மற்றும் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு (2019 - 2020) பொதுப்பணித்துறையின் சரபங்கா வடிநில கோட்டத்தின் சார்பில் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் 19 குடிமராமத்துப்பணிகளும், மேட்டூர் அணை கோட்டத்தின் சார்பில் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் ஒரு குடிமராமத்துப்பணி என மொத்தம் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 20 குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
இத்தகைய குடிமராமத்து திட்டப்பணிகளை பாசனதாரர் சங்கங்களின் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என ஆணையிடப்பட்டு 90 சதவீத நிதியினை அரசே அந்த பாசனதாரர் சங்கங்களுக்கு வழங்கி சங்கங்கள் 10 சதவீதம் மட்டுமே தங்களின் பங்களிப்பாக இட்டு இந்த பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு (2019-2020) சேலம் மாவட்டத்தில் ஆவணிப்பேரூர் மேற்கு, சங்ககிரி, கொங்கணாபுரம், அதிகாரிப்பட்டி, முள்ளுவாடி, தென்னங்குடிபாளையம், துலக்கனூர், கொட்டவாடி, அபிநவம், சின்னகிருஷ்ணாபுரம், ஜங்கமசமுத்திரம், வீரகனூர், திட்டச்சேரி மற்றும் சொக்கனூர் கிராமங்களை சார்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் ஏரியின் கரை பலப்படுத்துதல், மதகுகள் மற்றும் வழிந்தோடிகள் புனரமைத்தல், ஏரியின் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாருதல், கால்வாய்களின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டுதல் மற்றும் கான்கிரீட் லைனிங் அமைத்தல் உள்ளிட்ட 20 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகள் அனைத்தும் ஆயக்கட்டுதாரர்கள் பாசன சங்கங்களின் மூலம் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் 90 சதவீத அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இக்குடிமராமத்து திட்டப்பணிகள் மூலம் சுமார் 6259.68 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
இந்த குடிமராமத்து பணிகளில் ஆணைமடுவு அணை ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலும், பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கரியகோவில் அணை ரூ.56½ லட்சம் மதிப்பீட்டிலும் மேம்படுத்தும் பணிகளும் நடைபெறுகிறது.
புதிய குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு பாசனதாரர் சங்கங்கள் உரிய பதிவு சான்றிதழுடன் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் மற்றும் சேலம், ஆத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறையின் மேட்டூர் அணைகோட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட பாசனதாரர் சங்கங்கள் நேரில் சென்று விண்ணப்பித்து இக்குடிமராமத்து பணிகளை முழுமையாக நிறைவேற்றிட பாசனதாரர் சங்கங்கள் முன்வரவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் (சரபங்கா) கவுதமன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் (மேட்டூர் அணை) தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story