சொத்து தகராறில் விவசாயி கொலை, பெண் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை - திண்டிவனம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பிள்ளை (வயது 55), விவசாயி. இவருக்கும், உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த சண்முகப்பிள்ளை என்பவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கு திண்டிவனம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் கிருஷ்ணப்பிள்ளைக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் கிருஷ்ணப்பிள்ளை மீது, சண்முகப்பிள்ளை ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இதன் காரணமாக கடந்த 20.8.2013 அன்று சண்முகப்பிள்ளையின் ஆதரவாளர்களான மாத்தூரை சேர்ந்த ராமசாமி மகன்கள் பாஸ்கர் (36), சரவணன் (41), மோகனசுந்தரம் (29), ஆறுமுகம் (31), ஆதிகேசவன் (27), குப்புசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (43), முனுசாமி (60), நாராயணசாமி மகன் பச்சைமுத்து (23), குப்புசாமி மனைவி லட்சுமி (67) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணப்பிள்ளையை உருட்டுக்கட்டை, இரும்பு குழாயினால் சரமாரியாக தாக்கினர்.
இதை தடுக்க வந்த கிருஷ்ணப்பிள்ளையின் உறவினர்களான ராஜேந்திரன் (52), அவரது அண்ணன் நடராஜன் (58) ஆகியோரும் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராஜேந்திரன், நடராஜன் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணப்பிள்ளையின் மகன் சிவானந்த்ஸ்ரீராம், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பாஸ்கர் உள்ளிட்ட 9 பேர் மீதும் கொலை வழக்குப்பதிந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1-ல் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று பரபரப்பான தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திராதேவி, குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர், சரவணன், லட்சுமி உள்பட 9 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் திண்டிவனம் கோர்ட்டில் இருந்து வேனில் அழைத்துச்செல்லப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story