கடலூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை, 6 ஆண்டுகளுக்கு பிறகு மீனவரின் உடல் தோண்டி எடுப்பு - மனைவி, கொழுந்தன் கைது- பரபரப்பு வாக்குமூலம்


கடலூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை, 6 ஆண்டுகளுக்கு பிறகு மீனவரின் உடல் தோண்டி எடுப்பு - மனைவி, கொழுந்தன் கைது- பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 July 2019 5:00 AM IST (Updated: 5 July 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, கொழுந்தனுடன் கைது செய்யப்பட்டார்.

கடலூர்,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கூழையாறு கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் என்கிற முருகதாசன் (வயது 45). மீனவர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமிதா(34) என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.

திருமணத்துக்கு பிறகு இருவரும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் முறையே கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்போது 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முருகதாஸ் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். இதனால் முருகதாசின் தம்பி சுமேர்(30), அவ்வப்போது சிங்காரத்தோப்பில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவருக்கும், சுமிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அந்த வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமிதாவின் தம்பிக்கு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முருகதாஸ் சவுதி அரேபியாவில் இருந்து கடலூருக்கு வந்திருந்தார். 23.1.2013 அன்று முதல் முருகதாஸ் மாயமானார். இதனிடையே முருகதாஸ், மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டதாக உறவினர்களிடம் சுமிதா கூறினார். இதற்கிடையில சுமிதாவும், சுமேரும் திடீரென மாயமானார்கள்.

இந்த நிலையில் முருகதாசின் தாயார் பவுனம்மாள்(67), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அந்த மனுவில், எனது மகன் வெளிநாடு செல்லவில்லை. அவனை சுமிதாவும், சுமேரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.

இது தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் முதலில் சுமிதாவையும், சுமேரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரையும் போலீசார் பிடித்து, கடந்த 2-ந் தேதி கடலூருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுமிதாவும், சுமேரும் சேர்ந்து முருகதாசை கொலை செய்து, உடலை வீட்டில் புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு முருகதாசின் வீட்டிற்கு. சுமிதாவையும், சுமேரையும் போலீசார் அழைத்து வந்தனர். அங்கு முருகதாஸ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை இருவரும் காண்பித்தனர்.

பின்னர் தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது முருகதாசின் கை, கால், தலை எலும்பு கூடுகள் கிடைத்தன. அவை பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து சுமிதாவையும், சுமேரையும் கடலூர் துறைமுகம் போலீசார் கைது செய்தனர். போலீசில் சுமிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் முருகதாஸ், வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றதால் 2 குழந்தைகளுடன் சிங்காரத்தோப்பில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தேன். அப்போது எனது கணவரின் தம்பி சுமேர், அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது எனக்கும், சுமேருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி வீட்டில் உல்லாசம் அனுபவித்து வந்தோம். இதற்கிடையில் எனது தம்பியின் திருமணத்திற்காக சவுதி அரேபியாவில் இருந்து எனது கணவர் வந்திருந்தார்.

ஒரு நாள் வீட்டில் நானும், சுமேரும் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்தோம். இதை எனது கணவர் பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், எங்கள் இருவரையும் கடுமையாக கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் நானும், சுமேரும் சேர்ந்து துண்டால் முருகதாசின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பின்னர் வீட்டின் பின்புறம் குழிதோண்டி, முருகதாசின் உடலை புதைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்து விட்டோம். 2 நாட்களுக்கு பிறகு முருகதாஸ் எங்கே என்று உறவினர்கள் கேட்டனர். அதற்கு நான், மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன்.

இதன்பிறகு நானும், சுமேரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தோம். அதற்காக 2 குழந்தைகளையும், புதுக்குப்பத்தில் உள்ள முருகதாசின் தாய் பவுனம்மாளிடம் விட்டுவிட்டு, சென்னைக்கு சென்றோம். அங்குள்ள ஒரு மெடிக்கலில் சுமேர் வேலை பார்த்தபடி, பி-பார்ம் படித்தார். படிப்பு முடிந்ததும் இருவரும் கேரள மாநிலம் மலபாருக்கு சென்று, வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தோம். முருகதாசை கொலை செய்து 6 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், இனிமேல் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைத்தேன். இதனிடையே எனது 2-வது மகன் தலை முடி அதிகளவு உதிர்வதாக உறவினர் மூலம் தெரிந்து கொண்டேன். எனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் புதுக்குப்பத்துக்கு வந்து, 2-வது மகனை கேரளாவிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தேன். பின்னர் மீண்டும் அவனை, புதுக்குப்பத்தில் விட்டுவிட்டேன். ஆனால் போலீசார் எப்படியோ மோப்பமிட்டு, எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். 

Next Story