நாகர்கோவிலில் இருந்து மூதாட்டியை தனியாக பஸ்சில் அனுப்பி வைத்த மகள்


நாகர்கோவிலில் இருந்து மூதாட்டியை தனியாக பஸ்சில் அனுப்பி வைத்த மகள்
x
தினத்தந்தி 5 July 2019 5:00 AM IST (Updated: 5 July 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

யார் கவனிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நாகர்கோவிலில் இருந்து மூதாட்டியை தனியாக பஸ்சில் திருப்பூருக்கு அவரது மகள் அனுப்பி வைத்தார். திருப்பூரில் தவித்த அவரை மீட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

அனுப்பர்பாளையம், 

இந்த சமுதாயத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து அவர்களை ஆளாக்கி, அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் வாழ்நாளில் பாதிநாள் கழிந்து விடுகிறது. திருமணத்திற்கு பிறகு மகனோ, மகளோ தங்களை வீட்டோடு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு உள்ள பெரும்பாலான பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதன் விளைவுதான் இன்று முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகவும் உள்ளது.

இதில் ஒரு சில பெற்றோர் வீட்டிலும் இருக்க முடியாமல் முதியோர் இல்லத்திலும் இருக்க முடியாமல் தங்கள் விதியை நினைத்து மனம் நொந்து கொண்டு வீதிகளில் சுற்றி திரிவதும், வயிற்று பசிக்காக பிறரிடம் கையேந்துவதையும் காண முடிகிறது. பெற்றெடுத்த பெற்றோரை தெய்வமாக நினைத்து வணங்காவிட்டாலும் பரவாயில்லை. கடைசி காலத்தில் கூடவே வைத்து கண் கலங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போய் விட்டதே என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகி விட்டது. இந்த நிலையில் தனது தாயை அவரது மகள் சரிவர கவனிக்காமல் தனியாக பஸ்சில் ஏற்றி திருப்பூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். திருப்பூர் வந்த அவர் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுரோட்டில் தவித்து சமூக ஆர்வலர்கள் மீட்கப்பட்டார். அது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் தாராபுரம் ரோடு தெற்கு போலீஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் சுமார் 70 வயது மூதாட்டி ஒருவர் நடுரோட்டில் நின்றார். அந்த வழியாக வேகமாக வாகனங்கள் வந்தன. இதனால் சாலையை கடக்க முடியாமல் அவர் தவித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சமூக ஆர்வலர்களான திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன் மற்றும் அங்கேரிபாளையத்தை சேர்ந்த பழனிக்குமார் ஆகியோர் அந்த மூதாட்டியிடம் சென்று நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஒரு குறிப்பிட்ட பெயரை சொல்லி, புதுவீடு என்று அதையே திரும்ப, திரும்ப கூறி உள்ளார். இதையடுத்து பஸ் பிடித்து செல்வதற்கு பணம் உள்ளதா? என்று கேட்டுள்ளனர்.

ஆனால் அந்த மூதாட்டி, தன்னிடம் டீ குடிக்க கூட 10 ரூபாய் இல்லை என்று கூறி இருக்கிறார். பின்னர் அவரிடம் செல்போன் எண் ஏதாவது உள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து பையில் இருந்த ஒரு டைரியை எடுத்து கொடுத்துள்ளார் அந்த மூதாட்டி. அந்த டைரியில் 3 செல்போன் எண்கள் இருந்ததை கண்ட நாஞ்சில் கிருஷ்ணன் அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார். முதலில் இருந்த 2 எண்களுக்கு அழைப்பு போனாலும், யாரும் பதிலளிக்கவில்லை. அந்த 2 எண்களும் ட்ரூ காலரில் (ஏ.இ.) உதவி பொறியாளர் என்று வந்துள்ளது. இதனால் 3-வது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் ஒரு பெண் எடுத்து பேசி உள்ளார்.

அப்போது அந்த மூதாட்டி குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது, அவர் என்னுடைய தாயார் தான் என்றும், திருப்பூரில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு செல்வதற்காக தாயாரை நாகர்கோவில் ஆரல்வாய்மொழியில் இருந்து பஸ் ஏற்றி அனுப்பினேன் என்றும், தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் பல ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள அண்ணனே தாயாரை கவனித்து வருவதாகவும், மற்ற 2 சகோதரர்களில் ஒருவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலும், மற்றொருவர் பூதபாண்டியிலும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்கள் இருவரும் தாயாரை கண்டு கொள்வதே இல்லை என்றும் கூறி உள்ளார். எனவே தாயாரை அங்கேயே விட்டு விடுங்கள் என்றும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் மீண்டும் உதவி பொறியாளர் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் 2 பேரும் அந்த மூதாட்டியை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நடந்த விபரத்தை போலீசாரிடம் கூறியபோது, போலீசார் முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்லாமல், ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்? என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் நடுரோட்டில் தவித்த மூதாட்டியை பாதுகாப்பாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததில் என்ன தவறு உள்ளது? என்று கூறினார்கள். இதையடுத்து போலீசார் புகார் மனு கொடுக்குமாறு கூறினார்கள். அவர்களும் புகார் மனு கொடுத்த பின்னர் அந்த மூதாட்டியை போலீஸ் நிலையத்தில் விட்டு சென்றனர்.

இந்த நிலையில் அந்த சமூக ஆர்வலர் அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உதவி பொறியாளர் என்று வந்த செல்போன் எண்ணை கூறி, இது யாருடையது? என்று கேட்டுள்ளார். அந்த எண்ணை வைத்து விசாரித்ததில் திருப்பூரில் உள்ள ஒரு மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் ஒருவருடைய செல்போன் எண் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த மூதாட்டி கூறிய பெயரும் இந்த செல்போன் எண்ணுக்கு சொந்தக்காரரும் ஒரே நபர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் மின்வாரிய செயற்பொறியாளர் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரை தொடர்பு கொண்டு அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் இருக்கும் தகவலை தெரிவித்தார்.

அப்போது காலை 7 மணி ஆகிவிட்டது. போலீஸ் நிலையத்தில் இருந்தும் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக உதவி பொறியாளர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அவர் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தனது தாயாரை வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் உதவி பொறியாளர் தனது செல்போனுக்கு ஏராளமான மிஸ்டு கால்கள் வந்திருப்பதை அறிந்து அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய சமூக ஆர்வலரிடம் எனது தாயாரை எப்படி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லலாம்? என்றும், எனது குடும்ப விஷயத்தில் 3-வது நபரான நீங்கள் எப்படி தலையிடலாம்? என்றும் கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு சமூக ஆர்வலர் உங்களது தாயார் அதிகாலையில் நடுரோட்டில் தவித்து கொண்டிருந்தார். அவருக்கு உதவும் வகையிலேயே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றேன் என்று வேதனையுடன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அரசு ஊழியரான நீங்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கே அரசு சார்பில் உங்களுக்கு செல்போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதிகாலை 4.30 மணியில் இருந்து தொடர்பு கொண்டும் உங்களிடம் பேச முடியவில்லை. மின்வாரியத்தில் ஏதாவது விபத்து என்று பொதுமக்கள் அவசரத்திற்கு அழைத்தால் நீங்கள் இதுபோன்று செல்போன் அழைப்பை கண்டு கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்? என்றும் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த உதவி பொறியாளர் எனது தாயார் வழக்கமாக ரெயிலில் தான் வருவார். இந்த முறை பஸ்சில் வந்ததால் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இனி இதுபோன்று நடக்காது என்று வருத்தம் தெரிவித்தார்.

எது எப்படியோ ஒன்றும் அறியாத அந்த மூதாட்டியை இரவு நேரத்தில் பஸ் ஏற்றி விட்டதும், சகோதர-சகோதரிக்குள் சரியான புரிந்துணர்வு இல்லாததால் அவர் வந்த தகவலை முறையாக தெரிவிக்காததும் முதல் தவறாகும். 4 பிள்ளைகளை பெற்று, வளர்த்து ஆளாக்கி, அவர்களை சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வந்தும், அவர்களுக்குள் தாயை யார் கவனிப்பது என்பது தொடர்பான ஈகோ பிரச்சினையால் நடுரோட்டில் தவித்த மூதாட்டியின் நிலை “பெத்த மனசு பித்து - பிள்ள மனசு கல்லு” என்ற வார்த்தைக்கு சான்றாக அமைந்துள்ளது.

Next Story