சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 7 ஆண்டு சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 7 ஆண்டு சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பழனிசாமி நகரை சேர்ந்தவர் மாதவன்(வயது 54). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 18-11-2018 அன்று மாலை மாதவன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 4½ வயது சிறுமிக்கு முறுக்கு வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி, அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி அழுதபடி வீட்டில் இருந்து வெளியே வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி னாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதவனை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட மாதவனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கொலைமிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Next Story