தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை


தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 July 2019 3:45 AM IST (Updated: 5 July 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் உணவை கையாளும் பணியாளர்கள் சுத்தம் பற்றியும், உணவு பாதுகாப்பின் அவசியம் பற்றியும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதியில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பால் பாக்கெட்டுகள் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, தரம் குறைவாக இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செத்த கோழிகள், நோய் பாதிக்கப்பட்டு செத்த கோழிகளை விற்பனை செய்யக்கூடாது. அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலித்தீன் பொருட்களை உணவகங்கள், மளிகை கடைகளில் பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்டவற்றை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் உணவு வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். உணவு பொருட்களில் உள்ள கலப்படம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

உணவு கலப்படம் தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம்-2006-ன்படி அனைத்து உணவு வணிகர்கள் உரிமம், பதிவு பெற வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை, மாநகராட்சி நல அதிகாரி பூபதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி விஜயகுமார், நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், மளிகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், எண்ணெய் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story