மனைவியை வெட்டி விட்டு போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த தொழிலாளி கைது
திருப்பூரில் மனைவியை வெட்டி விட்டு போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அனுப்பர்பாளையம்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த காயத்ரிநகர் முதல் வீதியை சேர்ந்தவர் சுந்தர்குமார் (வயது 34). இவருடைய மனைவி முத்துசெல்வி (28). இருவரும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தாழ்வு மனப்பான்மை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்குமார் மனைவியிடம் தற்போது குடியிருக்கும் வீட்டை மாற்றி விட்டு வேறு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி உள்ளார். இதற்கு முத்துசெல்வி நீ வேண்டுமானால் எங்காவது போ. நான் வர மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மனைவி மீது சுந்தர்குமார் ஆத்திரத்தில் இருந்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை முத்துசெல்வி வேலைக்கு செல்வதற்காக புறப்பட்ட போது, சுந்தர்குமார் திடீரென அரிவாளால் முத்துசெல்வியின் கழுத்தில் பயங்கரமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த முத்துசெல்வி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முத்துசெல்வி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே சுந்தர்குமார் மனைவியை வெட்டிய அரிவாளுடன் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமாரிடம் (பொறுப்பு) சரணடைந்தார். பின்னர் ரவிக்குமார் அவரை 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் நிலையத்துக்கும் அரிவாளுடன் சுந்தர்குமார் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சுந்தர்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story