வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது


வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 7:21 PM GMT)

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர், 


அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 25), முத்துச்சாமி (45) மற்றும் பர்கூர் ஈரெட்டியை சேர்ந்த மாதேஷ் (35) ஆகியோர் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார், அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கோவிலூர் அருகே செலம்பூர் அம்மன் கோவில் பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், பதுக்கி வைத்திருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், மகேந்திரன், முத்துச்சாமி, மாதேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

Next Story