உக்கடம் வாலாங்குளக்கரையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 552 வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


உக்கடம் வாலாங்குளக்கரையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 552 வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை உக்கடம் பகுதியில் வாலாங்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 552 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

கோவை,

கோவை நகரில் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றி, அதற்கு பதிலாக குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்று இடம் ஒதுக்கப்படுகிறது.

உக்கடம் மஜீத் காலனியில் வாலாங்குளக்கரையோரம் 552 வீடுகள் கட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமானோர் குடியிருந்து வந்தனர். இந்த வீடுகளை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அங்கு குடியிருந்தவர்களுக்கு புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இன்னும் பலர் வீடுகளை காலி செய்யாமல் உறவினர்களுடன் குடியிருந்து வந்தனர்.

மஜீத்காலனி குளக்கரை வீடுகளை இடித்து அகற்றுமாறும், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யுமாறும் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் 75 பேர் 5 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்றனர். 552 வீடுகளையும் இடித்து அகற்றும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு வசித்து வந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடுகளை காலி செய்ய தங்களுக்கு கால அவகாசம் வழங்குமாறு கேட்டனர். மேலும் சிலர் இடிக்கப்பட்ட இடத்தில் தங்களது பொருட் களை தேடிப்பார்த்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மஜீத்காலனி குளக்கரையில் வசித்து வந்தவர்களை கணக்கிட்டு குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறவினர்களுக்கும் வீடுகள் வழங்குமாறு கேட்டுள்ளனர். உரிய ஆவணங்களை அளிக்குமாறும், அவர்களுக்கும் குடிசைமாற்று வாரியம் மூலம் உரிய வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வீடுகளில் பொதுமக்கள் வசிப்பதால் காலியான வீடுகளை இடித்துவிட்டு இந்த வீடுகளை பின்னர் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

552 வீடுகளை இடித்து அகற்றும் பணியை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story