இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு


இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு
x
தினத்தந்தி 5 July 2019 3:30 AM IST (Updated: 5 July 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் மனு கொடுத்தனர்.

ஈரோடு, 

ஈரோடு திண்டல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் பவித்ரா என்கிற நந்தினி (வயது 19). இவருக்கும், சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மணிகண்டனுக்கும் (23) கடந்த மாதம் 6-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி திடீரென நந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நந்தினியின் தந்தை ரவி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது மகள் இறந்த செய்தி கேட்டு நானும், எனது உறவினர்களும் அங்கு சென்றோம். அப்போது மணிகண்டனின் பெற்றோர், நந்தினி இறப்பு குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்தி விட்டோம். எனவே அவரது உடலை உடனடியாக தகனம் செய்யவேண்டும் என்று அவசரப்படுத்தினார்கள்.

அதன் பின்னர் எனது மகளின் உடல் காசிபாளையம் இடுகாட்டில் வைத்து எரிக்கப்பட்டது. ஆனால் எனது மகளின் இறப்பு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே எனது மகளின் சாவில் மர்மம் உள்ளதால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி சூரம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story