10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்: அதிகாரிகள் நிலஅளவீடு செய்ய வராததால் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்: அதிகாரிகள் நிலஅளவீடு செய்ய வராததால் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2019 4:30 AM IST (Updated: 5 July 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அதிகாரிகள் நிலஅளவீடு செய்யவராததால் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி பிராட்டியூர் கிழக்கு பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2014-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அஞ்சல்காரன்சாவடி என்ற இடத்தில் அமைந்துள்ள ராணிமங்கம்மாள் காலம் முதல் வழிபட்டு வந்த அமி பிள்ளையார் கோவில், அதை சார்ந்த தெப்பக்குளம், கல்மண்டபம் ஆகியவை அடங்கிய 10 ஏக்கர் 80 சென்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது ஆகும். அந்த இடத்தை எவ்வித சம்பந்தமும் இல்லாத தனிநபர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமித்து கட்டிடம் உள்ளிட்டவை கட்டி அனுபவித்து வருகிறார். எனவே, அந்த இடத்தை மீட்டு, பொதுகாரியங்களுக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஐகோர்ட்டு அந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் அந்த இடம், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அமி பிள்ளையார் கோவிலுக்கு உரியது என தீர்ப்பளித்தது. மேலும் அறநிலையத்துறை அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்ட இடத்தை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்வதாக கூறப்பட்டது. இதையறிந்த பாரதீய ஜனதா கட்சியினரும் அங்கு வந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் அங்கு பாரதீய ஜனதா கட்சியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

Next Story