அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்


அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 9:08 PM GMT)

குமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகன்யா, மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, மாநகராட்சி, வேளாண்மைத்துறை உள்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம், சதுரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 100 மீட்டர், 200, 800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்போட்டிகளும் நடைபெற்றன. ஓட்டம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் அரசு பெண் ஊழியர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

ஒழுகினசேரியில் உள்ள டென்னிஸ் சங்க மைதானத்தில் இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் நடந்தது.

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

போட்டிகள் 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Next Story