ஆளில்லா ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு, தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே இலங்கியனூர்- பிஞ்சனூர் இடையே சேலம் - விருத்தாசலம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இவ்வழியாக சேலம் மற்றும் பெங்களூரு பயணிகள் ரெயில்கள், சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த தண்டவாளத்தில் சரக்கு ரெயில்களும் சென்று வருகின்றன. இலங்கியனூர் மற்றும் பிஞ்சனூர் இடையே பல ஆண்டுகளாக ஆளில்லா ரெயில்வே கேட் செயல்பாட்டில் இருந்தது.
எடச்சித்தூர், வலசை, பரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் சென்று வருகிறார்கள். மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வதற்கும் இந்த ரெயில்வே கேட் வழியாகத்தான் சென்று வந்தனர்.
இந்த நிலையில் இந்த ரெயில்வே கேட் அருகில் புதிதாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ரெயில்வே ஊழியர்கள் நேற்று காலையில் சுரங்கப்பாதைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டினை மூடும் பணியில் ஈடுபட்டனர்.
இது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்கு வந்து, ரெயில்வே ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளில்லா ரெயில்வே கேட்டை மூடக்கூடாது என்று கோஷமிட்டனர்.
மேலும் ஆளில்லா ரெயில்வே கேட்டை மூடும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த நேரத்தில் அந்த வழியாக காரைக்காலில் இருந்து வரும் பெங்களூரு பயணிகள் ரெயிலை மறிப்பதற்காக காத்திருந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், நல்லூர், மங்கலம்பேட்டை இணைப்பு சாலை என்பதால் அருகில் உள்ள கிராம மக்கள் இவ்வழியை போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ஆளில்லா ரெயில்வே கேட்டை மூடினால் நல்லூர் - இலங்கியனூர் இடையே மணிமுக்தாற்றின் குறுக்கே பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம், பொதுமக்கள் பயன்பாடின்றி காட்சிப் பொருளாகி விடும். அந்த பாலம் கட்டப்பட்டதால்தான் இப்பகுதி வழியாக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
எனவே இந்த ஆளில்லா ரெயில்வே கேட்டை மூடக்கூடாது. மாறாக இங்கு , ரெயில்வே கேட்டை திறந்து, மூடும் வகையில நிரந்தரமாக ஒரு ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.இததொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story