ஆட்டோ-அரசு பஸ் மோதல்; தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி சாவு - ஒருவர் படுகாயம்


ஆட்டோ-அரசு பஸ் மோதல்; தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி சாவு - ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 July 2019 11:06 PM GMT (Updated: 4 July 2019 11:06 PM GMT)

துமகூரு அருகே ஆட்டோவும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி (அரசு) பஸ் ஒன்று சிவமொக்காவுக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நேற்று காலை 9 மணியளவில் துமகூரு (மாவட்டம்) புறநகர் மல்லசந்திரா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே வந்த ஒரு ஆட்டோவும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பஸ் மோதியதில், ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதுபற்றி அறிந்ததும் துமகூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிருக்கு போராடிய அந்த நபரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இதுபற்றி அறிந்ததும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது விபத்தில் பலியானவர்கள் துமகூரு மாவட்டம் குப்பி அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பசப்பா, அவரது மனைவி ரேணுகாம்மா, பசவராஜ், சஞ்சய், கோவிந்தராஜ் என்பதும், படுகாயம் அடைந்தவர் ரமேஷ் என்பதும் தெரிந்தது. குப்பியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு துமகூரு புறநகருக்கு ஆட்டோவை டிரைவர் ஓட்டி வந்த போது, அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. முன்னதாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் ரமேசை சந்தித்து மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார் ஆறுதல் கூறினார். ரமேசின் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார் கேட்டறிந்தார். ஆட்டோ மற்றும் அரசு பஸ் டிரைவர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் பலியான சம்பவம் துமகூருவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story