ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டத்தை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டத்தை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2019 4:15 AM IST (Updated: 5 July 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ரெயில்வேயை தனியார்மயமாக்கும் 100 நாள் செயல்திட்டத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று மதுரை ரெயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை,

இந்திய ரெயில்வே துறையை 100 நாட்களுக்குள் தனியார் மயமாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் செயல்திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் மதுரை ரெயில்நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் எஸ்.எம்.ரபீக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, ரெயில்வே அமைச்சகம், ஒட்டு மொத்த ரெயில்வே துறையையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் சூழலில், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் போது லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது தற்கொலைக்கு சமம் என்றும், லட்சக்கணக்கான பணியாளர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, ரெயில்வே அச்சக தொழிலாளர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்யும் போது, அவர்களது மனிதவளம் வீணாகும் என்பதை அரசு உணர மறுக்கிறது. உற்பத்தி தொழிற்சாலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு திறமையாக செயல்படும்போது, அவற்றை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க வேண்டிய தேவை என்ன? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அரசின் இந்த முடிவானது, நாட்டில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் சீரழிக்கும். எனவே, ரெயில்வே துறையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மதுரை கோட்டத்தை சேர்ந்த ரெயில்வே பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story