தூர்வாரப்பட்ட கண்மாய், ஊருணிகள் - கலெக்டர் ஆய்வு


தூர்வாரப்பட்ட கண்மாய், ஊருணிகள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2019 10:30 PM GMT (Updated: 5 July 2019 12:09 AM GMT)

சிங்கம்புணரி பகுதியில் அரசு சார்பில் தூர்வாரப்பட்ட கண்மாய்கள், ஊருணிகளை கலெக்டர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட தட்சன் ஊருணி, வேட்டையன் கண்மாய், அரணத்தான் குண்டு, செட்டியார் ஊருணி, பிலா ஊருணி உள்ளிட்ட 9 கண்மாய்களையும், சிங்கம்புணரி ஒன்றியம் கண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாதன்குளம், தல்லம்பாரி ஊருணி உள்ளிட்டவைகளையும் கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.

சிங்கம்புணரி பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதுமான மழை இல்லாமலும், மழைநீர் சேகரிப்பு இன்றியும் நிலத்தடி நீர்மட்டம் வெகு பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் சிங்கம்புணரி பகுதியிலுள்ள கண்மாய்கள், ஊருணிகள் அனைத்தையும் அரசின் சார்பில் தூர்வார உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும், மழைநீரை முறையாக சேகரிக்க வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்றார். பெரியார் நீட்டிப்பு கால்வாய் விரைவில் சீரமைக்கப்பட்டு நிரந்தர பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும். கண்மாய், ஊருணிகளை சிறந்த முறையில் தூர்வாரி கொடுத்ததற்காக கிராம மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

சிங்கம்புணரியில் சுற்றுப்புற சூழல் தினத்தையொட்டி தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பசுமை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக எஸ்.எஸ். பள்ளி தாளாளர் செந்தில்குமார் மற்றும் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டரை வரவேற்றனர்.

பள்ளி தலைமையாசிரியை ஹேமாமாலினி வாழ்த்தி பேசினார். இதில் சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிங்கம்புணரி பஸ்நிலையத்தை அடைந்தது. அங்கு மாணவர்களிடையே நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கலெக்டர் மழைநீர் சேமிப்பு பற்றியும் மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து கலெக்டரின் முன்னிலையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Next Story