கர்நாடகத்தில் கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் : தேவேகவுடா பேட்டி


கர்நாடகத்தில் கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் : தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 5 July 2019 5:48 AM IST (Updated: 5 July 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என்றும், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்றும் தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. கூட்டணி அரசில் சில குழப்பங்கள் இருப்பது உண்மை தான். ஆனால் அவற்றை சரிசெய்து கொண்டு ஆட்சியை நடத்துவோம். இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எக்காரணம் கொண்டும் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது.

கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, இந்த அரசு இன்று கவிழும், நாளை கவிழும் என்று கூறி வருகிறார். ஆனால் அது நடக்காது. அரசை விமர்சிக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அதை நாங்கள் தடுக்கவில்லை. கூட்டணி அரசு தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) என இரு கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது.

கர்நாடகத்தில் மாநில கட்சியை நடத்துவது என்பது சாதாரண வி‌ஷயமல்ல. நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கட்சியை நடத்தி வருகிறோம். அடுத்து 2023–ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாங்கள் இப்போது இருந்தே கட்சியை பலப்படுத்துகிறோம்.

உள்ளாட்சி, மாநகராட்சி தேர்தல் வருகிறது. அந்த தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ளது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட, தாலுகா அளவிலான புதிய நிர்வாகிகள் இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார்கள். இந்த நிர்வாகிகள் நியமனத்தை மாநில தலைவர் மற்றும் செயல் தலைவர் இணைந்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்கள்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் புதிய தலைவர் எச்.கே.குமாரசாமி கூறியதாவது:–

கட்சியின் மாநில தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பை நான் திறம்பட நிர்வகிப்பேன். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவேன். கட்சியும், ஆட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஆட்சியை நடத்துவதில் முதல்–மந்திரி குமாரசாமி கவனம் செலுத்துவார். நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வோம்.

நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. ஆனால் தேர்தலில் வெற்றி–தோல்வி என்பது சகஜமானது தான். தோல்வி நிரந்தரமானது அல்ல. தோல்வியில் இருந்து மீண்டெழுந்து வெற்றி பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு எச்.கே.குமாரசாமி கூறினார்.

இளைஞரணி புதிய தலைவர் நிகில் குமாரசாமி பேசுகையில் கூறியதாவது:–

இன்று (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு தேவேகவுடா எனக்கு போன் செய்தார். இளைஞரணி பதவியை ஏற்குமாறு கூறினார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. சிறிது காலம் கட்சி தொண்டராக இருந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு, அதன் மூலம் அனுபவத்தை பெற வேண்டும் என்றும், அதன் பிறகு கட்சி பொறுப்புகளுக்கு வரலாம் என்றும் கருதினேன்.

ஆனால் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளார். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த நான் பணியாற்றுவேன். நான் நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். இதனால் எனக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை.

நான் கடவுளாக மதிக்கக்கூடிய தேவேகவுடாவை பார்த்து, நானே கோபத்துடன் பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது தான் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. தேவேகவுடாவின் பக்கத்தில் இருந்து அவர் செயல்படும் விதத்தை பார்த்து நான் வளர்ந்துள்ளேன். அதனால் தேவேகவுடா வழியில் நான் செயல்படுவேன்.

மண்டியா தொகுதியில் எனக்கு வாக்களித்த 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு ஓட்டுப்போடாத வாக்காளர்களின் மனதை ஈர்க்கும் வகையில் இந்த 5 ஆண்டுகள் பணியாற்றுவேன்.

இவ்வாறு நிகில் குமாரசாமி கூறினார்.


Next Story