மாணவியை பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு: அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை சேலம் அருகே பரபரப்பு
சேலம் அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காக்காபாளையம், வேம்படிதாளம், கனககிரி, நடுவனேரி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறியதாவது:–
கடந்த ஆண்டு இந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளியில் படித்த ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு பேசப்படுகிறது. அது உண்மை என்றால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். எங்கள் குழந்தைகளை இப்போதே அனுப்புங்கள், வீட்டுக்கு அழைத்து செல்கிறோம்.
இவ்வாறு ஆவேசமாக கூறினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தலைமை ஆசிரியை அமுதா கூறும்போது, ஆசிரியர் தவறு செய்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இன்னும் சில நாட்களில் பெற்றோர்–ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற உள்ளது. அதில் உங்கள் புகாரை தெரிவியுங்கள், என்றார். ஆனால் பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், என்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறும்போது, கடந்த ஆண்டு ஒரு மாணவி பள்ளியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்தார். அதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது மாணவியை பலாத்காரம் செய்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.