கிருஷ்ணகிரியில் நீர் மேலாண்மை இயக்க ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரியில் நீர் மேலாண்மை இயக்கம் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசின் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல்சக்தி அபியான்) தொடர்பாக அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கிருஷ்ணகிரியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், தற்போது தேவைப்படும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராமங்களில் உள்ள கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு தனிநபர் இல்லம், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டுதல், நீர் ஆதாரம் இன்றி வறண்டுவிட்ட ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் மூலம் புதுப்பிக்கும் பணிகள், மரக்கன்றுகள் அதிக அளவில் நடுதல், பழமையான ஏரி, குளங்களை புதுப்பித்தல், கோவில் குளங்கள், தெப்பக்குளங்கள் புனரமைத்தல் போன்றவற்றின் கீழ் அடுத்த இரண்டு மாதத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவசாயிகள் தங்களது நிலங்களில் பண்ணைக் குட்டை அமைக்க வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, ஆகிய துறைகளுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல் சக்தி அபியான்) குறித்து வருகிற 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மத்திய அரசின் கூடுதல் செயலாளர், இயக்குனர்கள், பொறியியல் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், குமரேசன், உதவி இயக்குனர்கள் ஹரிகரன் (ஊராட்சிகள்), பழனிசாமி (தணிக்கை) மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story