கொரடாச்சேரி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்


கொரடாச்சேரி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 July 2019 4:30 AM IST (Updated: 5 July 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் ஊராட்சியில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. குடிநீர் வழங்கக்கோரியும், உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தி.மு.க. சார்பில் முசிறியம் கடைத்தெருவில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கமலாபுரம்-கொரடாச்சேரி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் கண்ணன், தி.மு.க. கிளை செயலாளர் பத்மநாபன் மற்றும் இரு கட்சிகளின் நிர்வாகிகள் முருகேஷ், கணேசன், கல்யாணி, ரவி, குமார், ஜோதிபாசு, மகாராணி உள்பட 40 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்மின்சிசாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story