வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் கடன் பெற்று சுயதொழில் செய்யலாம் - கலெக்டர் சாந்தா தகவல்


வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் கடன் பெற்று சுயதொழில் செய்யலாம் - கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 5 July 2019 10:45 PM GMT (Updated: 5 July 2019 5:46 PM GMT)

வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் கடன் பெற்று சுயதொழில் செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர்,

குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி.), மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் ஆணையம், கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்பும் பயனாளிகள் www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், வங்கி மூலம் கடன் பெறும் வசதி உள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் நகர மற்றும் கிராம பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் வாயிலாகவும், கிராம பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம், தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் மற்றும் கயிறு வாரியம் வாயிலாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-20 நடப்பு நிதி ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்திற்கு மானியத்திற்கான இலக்கீடாக 32 நபர்களுக்கு ரூ.96 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆதலால், ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரிலோ அல்லது 04328-224595, 225580 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story