மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபர் கைது
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சால்ட்லயன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் வீரையன்(வயது25). சம்பவத்தன்று பட்டுக்கோட்டைக்கு வந்த வீரையன் மோட்டார் சைக்கிளை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார்.
பின்னர் வீரையன் திரும்பி வந்த போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிக்கொண்டு அங்கிருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தார்.
இதைக்கண்ட வீரையன் அதிர்ச்சி அடைந்து அவரை விரட்டினார். உடனே அங்கிருந்த பொதுமக்களும் வீரையனுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட நபரை விரட்டி பிடித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஸ்வரன்(29) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story