ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்
ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை,
நீர்வள ஆதார அமைப்பு சென்னை மண்டலத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் என 37 நீர்நிலைகளை புனரமைக்க தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.16 கோடியே 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள் மற்றும் பாசன சங்கத்தினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் இயக்கத்தின் ஆய்வு குழுத்தலைவரும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை செயலாளருமான ராஜீப்குமார்சென் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
ஏரி, அணைகள் குடிமராமத்து பணிகள் நடைபெறுவதற்கு முன்பு நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பொது பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள ஏரி, குளங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் வந்தால் முதலில் தோக்கவாடி ஏரிக்கு தான் வரும். அதை விட்டு விட்டு அதற்கு பின்பு உள்ள ஏரிகள் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. எனவே தோக்கவாடி ஏரியை தூர்வார வேண்டும்.
தச்சம்பட்டு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரையோரம் பனை கன்று நட வேண்டும். ஏரி, குளங்களை அளந்து அவற்றை சுற்றி கற்கள் நட வேண்டும். ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
குடிமராமத்து பணியில் பாசன சங்கங்கள் ஈடுபட உள்ளன. இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அரசியல் தலையீடு இருந்தால் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.
குடிமராமத்து பணிக்கு ஜி.எஸ்.டி. வரி அதிக அளவில் விதிக்கப்பட்டுள்ளது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரப்படும் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் என மொத்தம் 37 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.16 கோடியே 7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் மூலமாக நியமன முறையில் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதை நடைமுறைப்படுத்தி தண்ணீர் வீணாவதை தடுத்தும், தண்ணீரினை சேமித்து பாசன உறுதியளிக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 12,213 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் குறிப்பிட்ட சில ஏரியை தவிர மற்றவையில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
தண்ணீரை சேமிப்பதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிராமத்திற்கும், கிராமத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. வரும் தலைமுறைக்கு நாம் பணத்தையும், நிலத்தையும் சேர்த்து வைப்போமே தவிர தண்ணீரை சேமித்து வைக்க போவது இல்லை. வருங்காலத்தை கருதி மக்கள் தண்ணீரை சேமிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story