மாவட்டம் முழுவதும், மதுபானம் விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபானம் விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி தலைமையில் போலீசார் தேனி காட்டுபத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்பனை செய்து கொண்டு இருந்ததாக கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த மணவாளன் (வயது 47), அல்லிநகரம் காந்திநகரை சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டி (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 39 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதுபோல், அல்லிநகரம் போலீசார், அல்லிநகரம் குறிஞ்சி நகர், பின்னத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, குறிஞ்சி நகர் சுடுகாடு பகுதியில் மதுவிற்பனை செய்ததாக போடி கணபதி நகரை சேர்ந்த அரவிந்தன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னத்தேவன்பட்டி மீனாட்சிநகரில் மதுவிற்பனை செய்ததாக க.விலக்கை சேர்ந்த தர்மர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் மற்றும் அருகே உள்ள கே.எம்.பட்டி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் போலீசார் கூடலூர் மெயின்ரோடு, பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்ற குருவி மண்டையன், அறிவழகன், தெய்வேந்திரன், சின்னன், முருகன், ராஜேந்திரன் ஆகியோர் மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த பேச்சியம்மாள், இந்துராணி ஆகியோரை பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 115 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உப்புக்கோட்டை பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த பாலார்பட்டி ஒத்த வீடு வடக்கு தெருவை சேர்ந்த ஆண்டிச்சாமி (48), உப்புக்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த சின்னபாண்டி (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story