திண்டுக்கல்லில் தடம் புரண்டது, கிரேன் மூலம் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள்


திண்டுக்கல்லில் தடம் புரண்டது, கிரேன் மூலம் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள்
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 7:40 PM GMT)

திண்டுக்கல்லில் தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டிகள், கிரேன் மூலம் தூக்கி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே டிராக்டர் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. நேற்று அந்த நிறுவனத்தில் இருந்து ஈரோட்டுக்கு டிராக்டர்கள் கொண்டு செல்ல வேண்டியது இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு டிராக்டர்களை ஏற்றுவதற்காக ஒரு சரக்கு ரெயில் கொடைரோடு நோக்கி சென்றது.

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் அனுமந்தநகர் கேட் அருகே இரவு 11 மணி அளவில் வந்தது. அப்போது ரெயில் திடீரென தடம் புரண்டது. அந்த ரெயிலின் 13 மற்றும் 26-வது பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இதனால் சரக்கு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடுத்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டது.

அதன்பிறகு தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி தொடங்கியது. மேலும் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பெட்டிகளை, தூக்கி தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடந்தது. இதில் சுமார் 2 மணி நேரத்தில் ஒரு பெட்டி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால், மற்றொரு பெட்டியை கிரேன் மூலம் தூக்கும்போது சக்கரம் கழன்று விட்டது.

இதையடுத்து சக்கரத்தை பெட்டியுடன் இணைத்து விட்டு, மீண்டும் பெட்டியை தூக்கும் பணி நடைபெற்றது. அதிகாலை 2 மணி அளவில் அந்த பெட்டியும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பெட்டிகளும், என்ஜினுடன் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு அந்த சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

அதேநேரம் சரக்கு ரெயில் தடம் புரண்டது, அனுமந்தநகர் ரெயில்வே கேட் அருகே தண்டவாளங்கள் இணையும் பகுதி ஆகும். இதனால் ரெயில்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதிகை, முத்துநகர், கொல்லம், கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கொடைரோடு, வடமதுரை, அம்பாத்துரை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story