தாளவாடி அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற புலி பொதுமக்கள் பீதி


தாளவாடி அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற புலி பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 6 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கன்றுக்குட்டியை புலி அடித்துக்கொன்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட கல்மண்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 49). விவசாயி. இவர் 4 பசு மாடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டின் முன்பு மாட்டு கொட்டகை அமைத்துள்ளார்.

நேற்று முன்தினம் பசுவண்ணா தன்னுடைய 4 மாடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகளையும் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள விவசாய பகுதிக்கு ஓட்டிச்சென்றார். மாடுகளும், கன்றுக்குட்டிகளும் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக பசுவண்ணா உட்கார்ந்தபடி மேய்ந்துகொண்டிருந்த மாடுகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது மாலை வேளையில் புலி ஒன்று திடீரென பாய்ந்து வந்தது. புலியை நேரில் பார்த்ததும் அவர் பீதியில் உறைந்து போனார். இதற்கிடையே மாடுகளும், கன்றுக்குட்டிகளும் சிதறி ஓடின.

இதில் புலி பாய்ந்து சென்று பசுவண்ணாவின் ஒரு கன்றுக்குட்டியை கவ்வி பிடித்தது. உடனே அவர் ‘புலி, புலி’ என சத்தம் போட்டு கத்தினார். அதற்குள் கன்றுக்குட்டியை அடித்து கொன்ற புலி, அங்கிருந்து அதை வாயில் கவ்வியபடி வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது.

அச்சத்தில் அவர் அலறியடித்தபடி கிராமத்துக்குள் சென்று நடந்தவற்றை கூறினார். இதற்குள் இருட்டிவிட்டதால் யாரும் கன்றுக்குட்டியை தேடி செல்லவில்லை. நேற்று காலை பசுவண்ணாவும், அந்த கிராமத்தை சேர்ந்த சிலரும் கன்றுக்குட்டியை தேடிச்சென்றனர். அப்போது கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் கன்றுக்குட்டியின் தலை மட்டும் கிடந்தது. உடலை புலி தின்றுவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்மண்டி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் நாய்க்குட்டி காணாமல் போய்விட்டது. எனவே அந்த நாய்க்குட்டியையும் புலி அடித்து கொன்றிருக்குமோ? என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிராமத்துக்குள் புலி புகுந்த சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story