தாளவாடி அருகே 2 பேர் சாவில் திடீர் திருப்பம்; தாய் - மகள் கழுத்தை நெரித்துக்கொலை, தந்தை உள்பட 7 பேர் கைது


தாளவாடி அருகே 2 பேர் சாவில் திடீர் திருப்பம்; தாய் - மகள் கழுத்தை நெரித்துக்கொலை, தந்தை உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2019 12:00 AM GMT (Updated: 5 July 2019 9:40 PM GMT)

தாளவாடி அருகே நடந்த தீ விபத்தில் தாய்-மகளை கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு வீட்டுக்கு தீவைத்ததாக தந்தை உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா. அவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு கீதா என்ற மகளும், மாதேவபிரசாத் என்ற மகனும் உள்ளனர். நாகண்ணா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜம்மாள் மகள் கீதாவுடன் மல்லன்குழி கிராமத்தில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தார். மாதேவபிரசாத் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ராஜம்மாளின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் தாய், மகள் 2 பேரும் உடல் கருகி பலியானார்கள். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

தீ விபத்தில் தாய்-மகள் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் ராஜம்மாளின் தந்தை உறவினர்கள் சிலருடன் சேர்ந்து மகளையும், பேத்தியையும் கொன்றுவிட்டு வீட்டுக்கு தீவைத்தது தெரிய வந்தது. இந்த பரபரப்பான தகவல் பற்றிய விவரம் வருமாறு:-

பணம் கேட்டதால்..

ராஜம்மாள் கணவர் நாகண்ணா இறந்த பின் தனது மகள் கீதாவுடன் அதேஊரில் உள்ள தனது தந்தை சிக்குமாதே கவுடா (வயது 65) வீட்டில் வசித்து வந்தார். ராஜம்மாள் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அதன் மூலம் தான் சம்பாதித்த ரூ.1 லட்சத்தை தந்தை சிக்குமாதே கவுடாவிடம் கொடுத்து வைத்து இருந்தார்.

இந்தநிலையில் தந்தை வீட்டில் எவ்வளவு நாளைக்குத்தான் இருப்பது என ராஜம்மாள் நினைத்தார். இதனால் தந்தை வீட்டை விட்டு மகளுடன் வெளியேறினார். பின்னர் தனது கணவருக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார். அப்போது வீடு கட்ட முடிவு செய்தார். இதனால் தந்தையிடம் தான் கொடுத்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் ராஜம்மாள் தனக்கு வீடு கட்ட பணம் வேண்டும் என்று தந்தையிடம் தொடர்ந்து கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

தாய்-மகள் கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த சிக்குமாதே கவுடா தனது உறவினர்களுடன் ராஜம்மாவை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் ராஜம்மாளின் வீட்டுக்கு சிக்குமாதே கவுடா, தனது மனைவி சிவமல்லம்மா (65), ராஜம்மாவின் மாமியார் தொட்ட மாதம்மா (70), நாகண்ணாவின் தம்பி லிங்கராஜ் (40), அக்காள் மாதேவம்மா (60), லிங்கராஜின் மனைவி நாகரத்னா (30), ராஜம்மாவின் தம்பி பீரேஸ் (26) ஆகிய 7 பேரும் சென்றனர். பின்னர் 7 பேரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த ராஜம்மாளையும், அவருடைய மகள் கீதாவையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்தநிலையில் கொலையை மறைப்பதற்காக நேற்று அதிகாலையில் குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் தாய்-மகளும் உடல் கருகி இறந்ததாக நாடகம் ஆடினார்கள்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ராஜம்மாளையும், கீதாவையும் கொலை செய்ததாக ராஜம்மாளின் தந்தை உள்பட உறவினர்கள் 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் 7 பேரும் சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சத்தியமங்கலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story