சிறப்பு சட்டங்கள் எத்தனை வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது - நீதிபதி முத்துசாரதா வேதனை


சிறப்பு சட்டங்கள் எத்தனை வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது - நீதிபதி முத்துசாரதா வேதனை
x
தினத்தந்தி 5 July 2019 11:15 PM GMT (Updated: 5 July 2019 10:27 PM GMT)

சிறப்பு சட்டங்கள் எத்தனை வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என்று சிவகாசியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் நீதிபதி முத்துசாரதா கூறினார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகாசி காரனேசன் பெண்கள் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட முதன்மை நீதிபதியும், விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான முத்துசாரதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண் என்பவளுக்கு கரு முதல் கல்லறை செல்லும் வரை இந்த சமூகத்தில் அநீதி இருக்கிறது. கருவில் பெண் குழந்தைகளை சிசு படுகொலை செய்கிறார்கள். பெண்களுக்கு சமூகத்தில் அநீதிதான் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக அளவில் சட்டங்கள் இருக்கிறது. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி சிறப்பு சட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது? குற்றங்கள் இல்லை என்றால் சிறப்பு சட்டங்கள் வர வேண்டிய நிலை இல்லை. சிறப்பு சட்டங்கள் எத்தனை வந்தாலும், நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி கொண்டு தான் இருக்கிறது. செல்போன் குழந்தைகளை பாழ்படுத்துகிறது. பெண் பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஆசிரியர் பணி மகத்தான பணி. ஆண்கள் உடல் அளவில் வலிமையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள். பெண் படித்தால் இந்த சமூகத்துக்கே பயன்படும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த காலங்களில் இங்கு குழந்தை தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. ஒரு குழந்தை வேலைக்கு செல்கிறது என்றால் அந்த குழந்தையின் பெற்றோர் சரியில்லாமல் போனது தான் காரணம்.

பெண்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. படிக்கின்ற காலத்தில் நீங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். எல்லாரும் 100-க்கு 100 வாங்க முடியாது. ஆனால் நீங்கள் செல்லும் துறையில் சிறப்பாக விளங்க வேண்டும். என்னை எனது வீட்டில் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை. அதன் பின்னர் தான் நான் சட்டம் படிக்க சென்றேன். நான் படிக்கின்ற காலத்தில் பெண்கள் அதிகம் சட்டம் படிக்க முன்வரவில்லை. ஆனாலும் நான் விரும்பி சட்டம் படித்தேன்.

உங்களை விட குறைந்த படிப்பு படித்த உங்கள் பெற்றோருக்கு அனுபவ அறிவு அதிகம் இருக்கும். எனவே அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் குடும்பநல நீதிமன்றம் பெருகி விட்டது. விவாகரத்து கேட்பது தற்போது அதிகரித்துள்ளது. கணவர் சொல்வதை கேட்க வேண்டும். மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story