குடிமராமத்து பணி ஆலோசனை கூட்டம், அறிவிப்பு கூட்டமானது; கண்மாய் தூர்வாரும் பெயரில் மணல் கடத்தல், விவசாயிகள் புகார்


குடிமராமத்து பணி ஆலோசனை கூட்டம், அறிவிப்பு கூட்டமானது; கண்மாய் தூர்வாரும் பெயரில் மணல் கடத்தல், விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 6 July 2019 5:00 AM IST (Updated: 6 July 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் கண்மாய் தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், குடிமராமத்து பணி ஆலோசனைக் கூட்டம் அறிவிப்புக் கூட்டமானது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43 கோடியே 12 லட்சம் செலவில் 135 கண்மாய்கள் சீரமைக்கப்படுகின்றன. இது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

பெரியார் வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பெரியார் பிரதான கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரப்பன், குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் விஸ்வநாத், வேளாண்மை இணை இயக்குனர் குமாரவடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் கலெக்டர் ராஜசேகர் பேசினார். அப்போது அவர், “குடிமராமத்து திட்டம் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டம். இந்த திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பணிகள் விவசாயிகள் மூலமே செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 135 கண்மாயின் பட்டியலை தற்போது அறிவிக்கிறேன். அதில் விடுபட்ட கண்மாய்கள் இருந்தால் அதற்கு மனு கொடுத்தால் அடுத்த குடிமராமத்து பணியின் போது சேர்த்து கொள்ளப்படும்“ என்றார்.

அதன்பின், செயற்பொறியாளர்கள் கண்மாய்களின் பெயர்களை வாசித்தனர். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கண்மாய்களின் பெயர்களை சேர்க்க வலியுறுத்தி கலெக்டரிடம் முண்டி அடித்து மனு கொடுக்க சென்றனர். சில மணி நேரத்தில் அந்த கூட்டம் முடிவுக்கு வந்தது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

உசிலம்பட்டி சுப்பிரமணியன்: குடிமராமத்து பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் என்றதால் அங்கிருந்து வந்தேன். என்னுடைய கருத்துக்களை கேட்பதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை. குடிமராமத்து என்ற பெயரில் கண்மாயில் மணல் திருட்டு தான் நடக்கிறது. ஒரு கண்மாய்க்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக செலவு செய்வதில்லை. பெரும் முறைகேடு தான் நடக்கிறது. சில கண்மாய்களில் பணியே நடைபெறாமல் நிதி முழுவதும் களவாடப்படுகிறது.

பேரையூர் நாராயணன்: எங்கள் பேரையூர் தாலுகா மிகப்பெரிய வறட்சியை சந்தித்து வருகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. வறட்சியால் கால்நடைகள் இறந்து வருகின்றன. ஆனால் எங்கள் ஊரில் வெறும் ஒரே ஒரு கண்மாய்க்கு தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நியாயமா?.

மேலூர் மயில்சாமி:- ஒரு கண்மாயை தூர்வார தொடங்குவதற்கு முன்பு, அது தற்போது எத்தனை அடி ஆழம் உள்ளது. எத்தனை அடி உயர கரை உள்ளது என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். சீரமைத்த பின்பு எத்தனை அடி அழம் தூர்வாரப்பட்டுள்ளது, எவ்வளவு உயரத்திற்கு கரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேறு பணிகள் என்னென்ன, அதற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதனை தெளிவாக விளம்பர பலகை மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பணிகள் முடிந்த பின், அவற்றை கிராம சபை கூட்டத்தில் வைத்து நிதி வழங்குவதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

கொட்டாம்பட்டி சுப்பையா:- ஒரு கண்மாயை தூர்வாருவதற்கு முன்பு அதனை முழுமையாக சர்வே செய்ய வேண்டும். கண்மாய்களை சர்வே செய்வதற்கு என்று தனியாக சர்வேயர் துறை ஏற்படுத்த வேண்டும். கண்மாயை தூர்வார்வது போல, அதன் வரத்து கால்வாய்களையும் முழுமையாக சீரமைக்க வேண்டும். அப்போது தான் கண்மாயில் முழுமையாக நீர் தேங்கும். இதில் எதனையும் செய்யாமல், கடனுக்காக நடக்கும் இந்த பணியால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story