வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் - நாராயணசாமி அறிவிப்பு


வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 12:00 AM GMT (Updated: 5 July 2019 11:01 PM GMT)

கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெறுபவர்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அமைச்சரவையில் 15 விதமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மகளிர் சுயஉதவிக்குழுவினர் சொந்தமாக தொழில் தொடங்க கடன் வாங்கினால் வட்டி கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். அதை தவிர்க்கும் விதமாக அன்னை இந்திரா பெண்கள் முன்னேற்ற திட்டம் என்ற பெயரில் உரிய காலத்தில் பணத்தை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதனால் 2,500 மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்பெறுவர்.

அதோடு மத்திய அரசுடன் இணைந்து 5 ஆயிரம் கிராம இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளோம். இதனால் அவர்கள் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.

புதுவையில் 11 ஆயிரம் பேர் கல்வீடு கட்ட மத்திய, மாநில அரசு திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 6 ஆயிரம் பேர் வீடு கட்டி உள்ளனர். 2,800 பேர் வீடு கட்டி வருகின்றனர். அவர்கள் வீடுகட்ட அரசு சார்பில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும் அவர்கள் ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் கடனாக பெறுகின்றனர். இந்த கடனை முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு 3 சதவீதத்தை மாநில அரசு மானியமாக அளிக்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம்.

புதுவை மாநிலத்தின் பால் தேவை 2 லட்சம் லிட்டராக உள்ளது. ஆனால் நமது மாநில உற்பத்தி 68 ஆயிரம் லிட்டர். மீதி பாலை வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்து வழங்குகிறோம். எனவே பால் உற்பத்தியை பெருக்க குறைந்த விலையில் கறவை மாடுகள் வாங்கித்தரவும், தீவன மானியம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

புதுவை சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அவர்கள் பல துறைகளில் ஓராண்டு காலம் நியமிக்கப்படுவார்கள். அதற்கான காலத்திற்கு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

அரசுக்கு தேவையான இடங்களை பெற தற்போதைய நில ஆர்ஜித சட்டத்தினால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நில உரிமையாளர்களிடம் அரசே நேரடியாக பேசி வாங்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம்.

புதுவையில் மின் தட்டுப்பாட்டை குறைக்கவும் மின் இழப்பீடு ஏற்படாமல் தடுக்கவும் ஜெய்கா திட்டத்தின் கீழ் ரூ.746 கோடி செலவில் பல மின் திட்டங்கள் அமல் படுத்தப்பட உள்ளது. இதன்படி மின் மாற்றிகள் பல மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு சதவீத வட்டியில் 25 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் விதமாக கடன்பெற உள்ளோம். வருங்காலத்தில் புதுவை மாநிலத்தின் மின் தேவை சுமார் 600 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story