நாகர்கோவிலில் நிறைவு விழா, மக்களை பாதுகாக்கவும், மனிதாபிமானத்துடனும் சேவையாற்ற வேண்டும்


நாகர்கோவிலில் நிறைவு விழா, மக்களை பாதுகாக்கவும், மனிதாபிமானத்துடனும் சேவையாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2019 4:00 AM IST (Updated: 6 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

மக்களை பாதுகாக்கவும், மனிதாபிமானத்துடனும் சேவையாற்ற வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த போலீஸ் பயிற்சி நிறைவு விழாவில் கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் பேசினார்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டத்தில் இருந்து 245 பேர் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமில், கடந்த சில மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, போலீஸ் பணி குறித்தும், போலீசாரின் ஒழுக்கம் குறித்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் போலீஸ் விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது.

இந்த நிலையில் பயிற்சியின் நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, நாகர்கோவில் குடும்பநல கோர்ட்டு நீதிபதி கோமதி நாயகம், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி. வன்னியப்பெருமாள் கலந்து கொண்டு பேசுகையில், போலீஸ் பணிக்கு புதிதாக அடியெடுத்து வைக்கும் பயிற்சி போலீசாருக்கும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த போலீஸ் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். போலீஸ் பணி என்பது மக்களை பாதுகாக்கவும், மனிதாபிமானத்துடனும் சேவை செய்வதற்கான பணியாகும். நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ் பயிற்சி பெற்ற டேனியல் மாநில அளவில் முதல் இடத்தையும், ராஜேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். போலீஸ் பணியில் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பயிற்சி போலீசாரின் அணிவகுப்பு, சிலம்பம், கராத்தே மற்றும் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. பயிற்சி முடிவடைந்ததை அடுத்து 245 பேரும் போலீஸ் பணியில் அமர்த்தப்படுவார்கள்.விழாவில் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story