திருச்சியில், நாணயங்கள், பணத்தாள்கள் கண்காட்சி தொடங்கியது - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
திருச்சியில் நாணயங்கள், பணத்தாள்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
திருச்சி,
திருச்சி தில்லைநகர் எஸ்.ஆர்.டி. ஹாலில் நாணயங்கள், உலக பணத்தாள்கள், தபால் தலை கண்காட்சி நேற்று முதல் தொடங்கியது. கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் முதல் உலக அளவிலான நாணயங்கள், பணத்தாள்கள் இடம்பெற்றுள்ளன.
பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்திய ரூபாய் நோட்டுகளில் பேன்சி ரக வரிசை எண் கொண்டவை, வரலாற்று பதிவுகளை கொண்ட பழமையான நோட்டுகளும் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், பர்மா, டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேசியா, பின்லாந்து, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 200 நாடுகளுக்கும் மேற்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பணத்தாள்களும், மிக பெரியதும், மிக சிறியதுமான பணத்தாள்களும் இடம்பெற்றுள்ளன.
சங்க கால முத்திரை காசுகள், பாண்டியர், சோழர் கால காசுகளும், இந்திய அரசால் 1950 முதல் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள நாணயங்களும் உள்ளது. இதேபோல வரலாற்று சிறப்பு மிக்க தபால் தலைகளும், தலைவர்களின் தபால் தலைகளும் உள்ளது.
ரூ.20, ஒரு ரூபாய் புதிய நோட்டுகள், ரூ.200, ரூ.100 புதிய நோட்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நாணயங்கள், பணத்தாள்களை பார்வையிட பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஒவ்வொரு அரங்கையும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் நாணயங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் உருவமும், கிரிக்கெட் உலக கோப்பை வடிவமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. கண்காட்சி தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறியன் காயின் கேலரி அமைப்பினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story