உயர்கல்வித்துறை முதன்மை செயலருடன் ஆய்வுக்காக வந்த போது - குடிநீர் கேட்டு கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை


உயர்கல்வித்துறை முதன்மை செயலருடன் ஆய்வுக்காக வந்த போது - குடிநீர் கேட்டு கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 July 2019 11:16 PM GMT (Updated: 5 July 2019 11:16 PM GMT)

உயர்கல்வித்துறை முதன்மை செயலரும், திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத்ராம் சர்மாவுடன் ஆய்வுக்காக வந்த கலெக்டர் விஜயலட்சுமியை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் திண்டுக்கல் சி.கே.சி.எம். காலனியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்வதற்காக மங்கத்ராம் சர்மா, கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போது குடிநீர் கேட்டு, அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் ஜிக்கா குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் அந்த குழாய் இணைப்புகள் அனைத்தும் சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழாய் இணைப்பு எங்கள் பகுதியில் இல்லை. இதனால் எங்களை போன்று வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டதால் ஏற்கனவே பதிக்கப்பட்ட பழைய குழாய்களில் தற்போது குடிநீர் வருவதில்லை. எனவே எங்கள் பகுதியில் பொதுக்குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிநீர் வினியோகம் சீராக உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 15-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்துள்ளேன். சில இடங்களை தவிர மற்ற இடங்களில் குடிநீர் வினியோகம் சீராக இருக்கிறது. ஆத்தூர் காமராஜர் அணைக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் போனது என்று புகார் வந்துள்ளது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக அவர் நிலக்கோட்டை ஒன்றியம் சிலுக்குவார்பட்டி, நரியூத்து, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்றார். அப்போது அந்த கிராமங்களில் குடிநீர் வினியோகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள், நீரேற்று நிலையங்கள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

Next Story