பெண்ணாடத்தில், லாரி டிரைவர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெண்ணாடத்தில் லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் செம்மேரிசாலை நாராயணன் கார்டனில் வாடகை வீ்ட்டில் வசித்து வருபவர் சரவணன்(வயது 34). இவர் பெண்ணாடம் அருகே உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
புழுக்கம் காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு வீட்டின் மொட்டை மாடியில் சரவணன் குடும்பத்துடன் படுத்து உறங்கினார். பின்னர் அவர் நேற்று அதிகாலையில் மாடியில் இருந்து கீழே வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. துணிகள் உள்ளி்ட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவி்ல் இருந்த தங்கசங்கிலி, மூக்குத்தி, தோடு என 5 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், வங்கி ஏ.டி.எம்.கார்டு, கணக்கு புத்தகம், நகை அடமான ரசீது ஆகியவற்றை காணவில்லை. வீட்டின் மொட்டை மாடியில் சரவணன் குடும்பத்துடன் தூங்குவதை அறிந்துகொண்டு யாரோ மர்ம மனிதர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.1½ லட்சம் நகை, பணம் உள்ளி்ட்ட பொருட்களை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.
அதேபோல் அருகில் பூட்டி கிடந்த எல்.ஐ.சி. மேலாளர் வீட்டின் முன்பக்க கதவைவும் மர்ம மனிதர்கள் இரும்பு கம்பியால் நெம்பி உடைக்க முயன்றுள்ளனர். இதனால் மர்ம மனிதர்கள் முதலில் எல்.ஐ.சி. மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்று அது முடியாமல் போனதால் சரவணன் வீ்ட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து பெண்ணாடம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வந்து திருட்டு நடந்த வீ்ட்டில் ஜன்னல், கதவு களில் இருந்த தடயங்களையும் சேகரித்து சென்றனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு சவரணன் வீ்ட்டுக்கு அருகில் உள்ள வீ்ட்டில் கொள்ளை நடந்துள்ளதாகவும், எனவே நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சரவணன் மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவுசெய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story