விருத்தாசலம் அரசு பள்ளியில், மடிக்கணினியை எம்.எல்.ஏ. வழங்க அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினியை எம்.எம்.ஏ. வழங்க அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷ்டி பூசலால் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழா நிறுத்தப்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக கலைச்செல்வன் உள்ளார். அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், டி.டி.வி. தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதையடுத்து விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவிற்கு சென்ற கலைச்செல்வன் எம்.எல்.ஏ.விற்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழா நிறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக கலைச்செல்வன் எம்.எல்.ஏ. காலை 9 மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.
இது பற்றி அறிந்ததும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளரான நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆலோசனைபடிதான் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என்ற கூறினர். மேலும் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. விலையில்லா மடிக்கணினி வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே கலைச்செல்வனின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டு வந்தனர். இதனால் பள்ளிக்கூடத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பு ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பு ஆதரவாளர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் சமாதானப்படுத்தினார்.
அப்போது தலைமை ஆசிரியர் செல்வராஜ் கூறுகையில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்ற முறையில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வை விழாவிற்கு அழைத்திருந்தோம். அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆலோசனையை பெற்று இருதரப்பையும் அழைத்து விரைவில் மடிக்கணினி வழங்கும் விழாவை நடத்துவோம் என்று கூறினார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து சென்று விட்டனர். அ.தி.மு.க. கோஷ்டி பூசலால் விழாவில் ஒரு மணி நேரம் காத்திருந்த மாணவிகள், மடிக்கணினி பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து கலைச்செல்வன எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இந்த பள்ளிக்கூடத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து உள்ளேன். ஆனால் அரசு விழாவில் மடிக்கணினி வழங்குவதை எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் தடுத்து விட்டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியரை நிர்ப்பந்தப்படுத்தி அரசு வழங்கும் திட்டத்தை தடுப்பது எந்த வகையிலும் நல்லதல்ல. இந்த செயலால் மாணவிகள் ஒரு மணி நேரம் காத்திருந்தும், மடிக்கணினி வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்றது வேதனையாக உள்ளது, இதுபற்றி வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல்-அமைச்சரை சந்தித்து தெரிவிப்பேன் என்றார்.
சந்திரகுமார் கூறுகையில், நான் அ.தி.மு.க. நகர செயலாளர் என்ற முறையில் அரசு விழாவில் பங்கேற்க முடியாது. நான் விழாவை தடுக்கவில்லை. அதை தடுப்பதற்காக செல்லவில்லை. தலைமை ஆசிரியரை சந்தித்து, அமைச்சரிடம் கூறிவிட்டு மடிக்கணினி கொடுங்கள் என்று கூறினேன். விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சரிடம் ஆலோசனை கேட்டுதான் அந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மடிக்கணினி வழங்கினார். அதுபோல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மடிக்கணினி வழங்குங்கள் என்றுதான் கூறினேன் என்றார்.
Related Tags :
Next Story