மராட்டிய அணைகளில் 8.87 சதவீதமே தண்ணீர் இருப்பு : பல மாவட்டங்களில் வறட்சி நீடிக்கிறது
பல மாவட்டங்களில் வறட்சி நீடிப்பதால், மாநிலத்தில் உள்ள அணைகளில் 8.87 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதன் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தன. இதையடுத்து மாநில அரசு பல இடங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்தது.
இந்தநிலையில், இந்த ஆண்டும் பருவமழை தாமதமாக தொடங்கியது. இதில் அண்மையில் மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக மும்பை பெருநகரத்துக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5 சதவீதமாக இருந்த தண்ணீர் இருப்பு 12 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் மும்பை மற்றும் சுற்றுப்புறங்களில் அதிகப்பட்ச மழை பெய்தபோதிலும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயரவில்லை.
இதற்கிடையே மாநிலத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 267 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை நம்பி தான் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஏரிகளில் 8.87 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டில் கூட இதே காலக்கட்டத்தில் 18.7 சதவீதம் தண்ணீர் இருப்பு இருந்தது. இதில் மிகவும் குறைந்த பட்சமாக அவுரங்காபாத் கோட்டத்தில் உள்ள 964 அணைகளில் 0.56 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
அவுரங்காபத்தில் உள்ள பைதான், பீட் மாவட்டத்தில் உள்ள மசல்காவ், மஞ்ச்ரா, ஹிங்கோலியில் உள்ள எல்டாரி, சித்தேஸ்வர், உஸ்மனாபாத்தில் உள்ள லோயர் டெர்னா, சினாகோலேகாவ், பர்பனியில் உள்ள துதானா, நாக்பூரில் உள்ள கோசிகுர்ட், பவந்தடி, கட்சிரோலியில் உள்ள தினா, நாசிக்கில் உள்ள சங்காப்பூர், கட்வா, திஷ்காவ், புனோகாவ், பாம், புல்தானாவில் உள்ள கடன்புர்னா, யவத்மாலில் உள்ள இசாபுர், சோலாப்பூரில் உள்ள உஜனி, புனேயில் வடஜ், எட்காவ், கோட், பிம்பல்காவ் ஜோகே ஆகிய அணைகள் முற்றிலும் வறண்டு விட்டன.
மராட்டியத்தில் சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டபோதிலும், இன்னும் பல மாவட்டங்களில் வறட்சி நீடிக்கிறது. எனவே பருவமழை கருணை காட்டுமா? என மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story