டாக்டர் பயல் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை அழித்த 3 டாக்டர்கள் : பரபரப்பு தகவல்கள்
தற்கொலை செய்யும் முன் டாக்டர் பயல் எழுதி வைத்த கடிதத்தை கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அழித்தது கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் கடந்த மே மாதம் 22-ந் தேதி மருத்துவ கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த டாக்டர் பயலை சாதி ரீதியில் அவருடன் படித்து வந்த 3 மூத்த டாக்டர்கள் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் டாக்டர் பயலை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மூத்த டாக்டர்களான ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போலீசார் டாக்டர் பயலின் அறையில் இருந்து அவரது செல்போன் தவிர தற்கொலை தொடர்பாக எந்த ஆதாரங்களையும் கைப்பற்றவில்லை. எனவே அவர்கள் டாக்டர் பயலின் செல்போனை ஆய்வுக்காக கலினா தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்தநிலையில் தடயவியல் நிபுணர்கள் டாக்டர் பயலின் செல்போனில் இருந்து 3 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதத்தின் போட்டோக்களை மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில் கைது செய்யப்பட்ட 3 மூத்த டாக்டர்களும், டாக்டர் பயலை சாதி ரீதியில் துன்புறுத்தியதாகவும், அதிக வேலை கொடுத்து கொடுமைபடுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர டாக்டர் பயல் கடந்த ஓராண்டாக கைது செய்யப்பட்ட 3 மூத்த டாக்டர்களால் எப்படியெல்லாம் கொடுமைபடுத்தப்பட்டார் என்பது குறித்து விரிவாக எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர் பயலின் செல்போனில் தற்கொலை கடிதத்தின் புகைப்படம் மீட்கப்பட்டதை அடுத்து உண்மையான கடிதம் எங்கே போனது என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
டாக்டர் பயல் தற்கொலை செய்த அறைக்குள் கைது செய்யப்பட்ட டாக்டர்களில் 2 பேர் தான் முதலில் நுழைந்து உள்ளனர். இந்த காட்சிகள் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே அவர்கள் தான் தற்கொலை கடிதத்தை அழித்து இருக்க வேண்டும். மேலும் அவர்கள் சாமர்த்தியமாக செல்போனில் பயல் எடுத்து வைத்திருந்த தற்கொலை கடிதத்தின் போட்டோவையும் அழித்து உள்ளனர். எனினும் தடவியல் நிபுணர்கள் செல்போனில் அழிக்கப்பட்ட போட்டோக்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பயல் தற்கொலை சம்பவத்தில் தற்கொலை கடிதம் மீட்கப்பட்ட சம்பவம் வழக்கு விசாரணையில் போலீசாருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடிதத்தை வைத்து கைது செய்யப்பட்ட 3 டாக்டர்களையும் விரைவில் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story