சேலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்


சேலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 1:35 PM GMT)

சேலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்–2 படித்தார்.

அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகவும், வேதியியல் ஆசிரியராகவும் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான அந்த மாணவி இதுகுறித்து சக தோழியிடம் கூறினார். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரியவந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் கல்வி அதிகாரிகள் அங்கு சென்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உதவி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே மாணவியை கர்ப்பமாக்கியதாக கூறப்படும் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் அவர் போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்திக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக வந்தனர். ஆனால் சில போலீசார் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரத்தில் உதவி தலைமை ஆசிரியரை காப்பாற்ற பணம் கைமாறியதாகவும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது. எனவே இந்த சம்பவத்தில் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


Next Story