திருவிடைமருதூர் அருகே, பந்தல் காண்டிராக்டரின் குடோன் தீப்பிடித்து எரிந்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்


திருவிடைமருதூர் அருகே, பந்தல் காண்டிராக்டரின் குடோன் தீப்பிடித்து எரிந்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே, பந்தல் காண்டிராக்டரின் குடோன் தீப்பிடித்து எரிந்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம் அடைந்தன.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் பந்தல் காண்டிராக்டர். தஞ்சை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் திருமண விழா, அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அலங்காரம் செய்து தொழில் செய்து வருகிறார்.

பந்தல் அலங்காரத்துக்கு தேவைப்படும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கலியபெருமாள் அதே பகுதியில் தகர கொட்டகையில் குடோன் அமைத்து இருந்தார். அந்த குடோனில் சவுக்கு மரங்கள், திருமண மேடை, ஆர்ச்சுகள், அலங்கார துணிகள், இரும்பு கம்பிகள், தரை விரிப்புகள், யாக சாலை அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் பூக்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த பந்தல் அலங்கார பொருட்கள் அனைத்தும் கொழுந்து விட்டு எரிய தொடங்கின. அங்கிருந்து தீ மள மளவென அருகே வசித்து வரும் சாந்தமூர்த்தி என்பவருடைய வீட்டுக்கு பரவியது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் திருவிடைமருதூர், கும்பகோணம், குத்தாலம் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள், 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் குடோன் மற்றும் வீட்டில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாயின. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்தின்போது குடோனில் நிறுத்தப்பட்டிருந்த கலியபெருமாளுக்கு சொந்தமான கார் லேசான சேதங்களுடன் தப்பியது.

சாந்தமூர்த்தியின் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து கலியபெருமாள் திருவிடைமருதூர் போலீசில் புகார் கொடுத்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story